Abdulthink

Tuesday, July 27, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல்..

றவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே
ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.


ரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?


ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.


வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.


கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"


அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"


வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.


மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"


திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.


இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?


தையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.


புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.


வறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.


னவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

Wednesday, July 14, 2010

என்றாவது ஒருநாள்..

என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பலகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!

வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இழிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!

தயக்கத்திலே..

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!

பாலையில் நீ..

மணம் வீசும்
மண வாழ்வில்
மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே
தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்
பாலைக்கு!

வீங்கிய இமைகளும்
தூங்க மறுக்க;
சாயம் போகா மருதாணியும்
புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!
மருந்தாய் உன் குரல் மட்டும்;
விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்
சிணுங்கிய கண்களோடும்
இல்லாத வார்த்தைகளால்
சொல்லாமல் நான் தவிக்க;
வருட வேண்டிய நீயோ
வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;
யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட
பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்
புரிந்துக்கொள்ளும் தூரத்தில்
நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்
என்று யாரோ சொல்ல;
கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!

இதோ இதோ என்று
இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;
என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி
பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்
காய்ந்துப் போன மனதுடன்
தீய்ந்துப் போன வயதுடன்
இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக
என் பெற்றோருக்கு!!

தீராத எங்கள் தாகம்..

பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;

கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!

காலம் கடந்து..

உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!

பயந்து பலியாவதைவிட..

வீதியில் நாங்கள்
பாதியில் பயணம்;
அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;
ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;
பாதம் மட்டும்தான்!!

வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று
வீதியில் உலா வர;
சிதறி ஒடிய கூட்டதிற்குள்
குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!

அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;
கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!

கரம் சோர்ந்தாலும்
கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;
என் முட்டி இரண்டும்
பூமியை முத்தமிடுவதற்கு முன்
பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!

கனலாய் கண்ணீர்த் துளிகள்
வீழ்வதற்காக அல்ல;
என் தலைமுறை வாழ்வதற்காக!!

கற்களோடு
களத்தில் நாங்கள்;
வருத்தப்பட வேண்டிய உலகமோ
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;
அட்டைப்படம் ஜொலித்தது!!

வீழ்ந்த மழலைகளைச் சுற்றி
சூழ்ந்த கூட்டம்;
ஒளிரும் புகைப்படக் கருவியால்
மிளிரும் பக்கங்கள்;

கவிதைக்குக் கருவாய்
படத்திற்குக் கதையாய்
கட்டுரைக்கு உரையாய்
வரலாற்றுக்கு வலியாய்
செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்
பாலஸ்தீனியராக நாங்கள்;

பறித்துக் கொண்ட என் உரிமைகள
பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்
தீவிரவாதி என்று!!

இனி
வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்
பயந்து பலியாவதைவிட
பாய்ந்து புலியாவதே மேல்!!

எப்போது விடுமுறை?

ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!


அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!

இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!

அயல்தேசத்து ஏழை..!

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான் துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !

மரஉச்சியில் நின்று ...
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்....நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்! கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு! பழையசடங்குகள் மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது எங்களின் நீண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின் நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான் ஆறுதல் தருகிறது!
ஆம்... இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;

" இறுதிநாள் " நம்பிக்கையில்தான் இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு... முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும்- ரியாலும் தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின் வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின் மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்... பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு..!

இணைய நட்பு..!

இணைய நட்பு
என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகிதனே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?


திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்...


காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்...


இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?

கேட்காதே...!

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை
ரகசியமாய் பேசிச்செல்வான்
ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை,
பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை
அவன் வரிகளை..!

வணிகம்..!

உன் மனதை
எனக்கு கொடுத்து விட்டு..
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்!
காதல் ஒரு வணிகமா! இல்லை சுயநலமா!
எப்படியிருந்தாலும்.......
இந்த இரண்டிலும் நீயே வென்றாக வேண்டும்.

மனம்தான் இல்லை!

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே
எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்
ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்
உண்மையிங்கு அதுவல்ல..!

நாம் யார்?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!

வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்

நிஜத்தை
தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!

கடிதத்தை
பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்

மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!

நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!

ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்
துறந்தவர்கள்!

வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து

கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!

தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!

அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!

உழைப்பு என்ற
உள்ளார்ந்த
அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு

முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!

கொளுத்தும்
வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும்
தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த
குழந்தைக்கும்
உற்ற
குடும்பத்திற்கும்

உண்மை
நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள் ஆனாலும்.....

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

ஆனாலும்.....


மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு
நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?