Abdulthink

Monday, September 20, 2010

இப்படிக்கு உன் கணவன்..

அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!

Source : itzyasa.blogspot.com

நான் மட்டும் தனியாக...

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கு
செல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி தேம்பி அழுதான்!

அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுத்தில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமாணமாகத நினைவுகளுடன்;
ஊர்ச் செல்லும் கனவுகளுடன்!

Source : http://itzyasa.blogspot.com

Wednesday, September 15, 2010

இன்னொருக் குழந்தை ..

சிரித்துப்பேசும் நானோ சிலநேரம்
சினந்துக்கொள்வேன் உன்னைக்
கடிந்துக்கொள்வேன்!

இல்லாத துன்பத்தை
இழுத்துப் போர்த்திக்கொண்டேன்;
இல்லாள் உனை நான் சொல்லாலே
குத்தினேனோ!

பிறந்தவீட்டை விடுத்து என்னிடம்
பறந்த வந்த சொந்தமாய் நீ;
இனியும் உன்னை கடுகடுக்க மாட்டேன்
உன் கர்பக்காலத்தைக் கண்டப் பிறகு!

அல்லல்படும் அவதியிலும்
எனைக் கண்டு அழகாய் சிரித்தவள் நீயோ;
எல்லோரும் தூங்கினாலும்
எட்டி உதைக்கும் நம் பிள்ளையை
தொட்டுப்பார்க்க எனை எழுப்பும்
இன்னொருக் குழந்தை நீயோ!

இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
நீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!

இனியொருமுறை வந்தாலும் ஈகோ
துரத்தியடிப்பேன் ச்சீ ச்சீ கோ கோ!

Source : http://itzyasa.blogspot.com

Tuesday, September 14, 2010

பொறையேறும் போது..

மெத்தையில் இருந்தாலும்
ஒத்தையாக நான்;
குளுக்குளு அறையில் இருந்துக்கொண்டே
குமுறிக்கொண்டிருக்கும் உள்ளம் மட்டும்!

கண்ணைத் திறந்துக்கொண்டேக்
கண்காணாத் தேசத்தில்;
விழிமுழுவதும் நீரோடு - உன்னை
விழிக்காண்பது எப்போது!

வருந்தாத நாளில்லை
வருமானத்தில் ஏற்றமில்லை;
வயசுள்ள காலமெல்லாம் பாலையோடு
வயசான காலத்தில் உன்னோடு!

பொய்யெனத் தெரிந்தாலும்
பொறையேறும் போது நினைத்துக்கொள்வேன்
உன் நினைவுதான் என்று!

சின்னச் சின்னச் சந்தோஷத்தோடு
சீக்கிரம் முடிந்திடாதா என் பாலை நாள்;
எதிர்பார்துக்கொண்டே இருக்கிறேன்
எப்போது நான் உன்னோடு வாழும் நாள்!!

Source : http://itzyasa.blogspot.com

Monday, September 13, 2010

புரியாத உன் பாசம்..

உன்னை அழைக்கும் போதே
குளிருதம்மா உள்ளம்;
கோடி நபர் இருந்தாலும்
உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!

எப்போதும் விலக மாட்டாய் எனைவிட்டு
யாருக்கும் கொடுக்கமாட்டாய் என்னை விட்டு!
புரியாத உன் பாசம் புனிதமானது
புரிந்துக்கொள்ள மிகவும் அரிதானது!

காதோடு நரைவிழுந்தப்பின்னும் என்
காதைத் திருகும் உரிமை உனக்கு மட்டும்தான்;
பசிக்கவில்லை என புசிக்கமால் இருந்தாலும்
ஊட்டி விடும் உன் விரல் மருந்தால்
செரிமானம் ஆகும் உள்ளமும் சேர்ந்து!

தோளுக்குமேல் வளர்ந்தாலும் என்
தலை சாயும் உன் மடியில்தான்;
உன் பிரசவ வேதனையை உணர்ந்துக் கொண்டேன்
எனக்கொரு குழந்தைப் பிறக்கையிலே!

Source : http://itzyasa.blogspot.com

Tuesday, September 7, 2010

நீங்கள் செய்வதை உலகம் பார்க்கின்றது: கூகிளும் அதன் அபாயகரமான பிரைவசிக் கொள்கையும்..!

ணையத்தை பயன்படுத்த தெரிந்த ஒவ்வொருவரும் கூகிளையும் பயன்படுத்தி இருப்பார் என்றால் அது மிகையாகாது.

கூகிள் என்பது இன்று அனைவராலும் அறியப்பட்டது ஒன்று. அனால் அனைவராலும் அறியப்படாதது கூகிள் பிரைவசி பாலிசியின் (கொள்கை) உண்மை நிலவரம்.

பிரைவசி என்பதற்கு ஒரு நபரின் அந்தரங்கத் தகவல் – தனித்தகவல் – சுயத்தகவல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

கூகிளின் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதற்க்கான விலை என்ன தெரியுமா ? உங்களின் பிரைவசி.

கூகிளில் செய்யும் எதுவும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படியே உள்ளது.

இதைப்பற்றி கூகிள் தலைவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்றல், முதலில் நீங்கள் அதை செய்திருக்கவே கூடாது” (கீழே காணொளியைக் காணவும்).

http://www.huffingtonpost.com/2009/12/07/google-ceo-on-privacy-if_n_383105.html

குகூல் நீங்கள் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறீர்கள், என்னன்ன சொற்க்களைத்தேடுகிறீர்கள், எதை டவுன்லோட் செய்கிறீர்கள் என அனைத்தையும் தனது தளத்தில் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களின் இ-மைல்கள் போன்றவற்றையும் அலசி ஆராயும் தன்மை கொண்டுள்ளதாக பல தன்னார்வ குழுக்கள் குற்றம் சாற்றுகின்றன.

டந்த வாரம் கூகிளுக்கு எதிரான பிரைவசி தொடர்பான வழக்கு ஒன்றிற்காக 40 கோடி நஷ்டஈடு கொடுக்க முன்வந்துள்ளது கூகிள் (http://arstechnica.com/tech-policy/news/2010/09/google-coughs-up-85-million-to-settle-buzz-privacy-suit.ars)

து மட்டுமல்ல மாற்றுமொரு தன்னார்வக்குழு கூகிளுக்கு எதிராக ஒரு விளம்பர பிரசாரத்தயே துவக்கி உள்ளது (காணொளியை கீலே காணலாம்).

http://www.youtube.com/watch?v=Ouof1OzhL8k


கூகிள் குரோம் என்ற கூகிளின் இணையதளச் சுற்றி (browser) நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் (நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தையும் கூட) கூகிளின் தாய்த்தளத்திற்கு அனுப்பி விடுகிறது (காணொளியை கீலே காணலாம்).

ந்த தகவல்கள் அங்கு பதிவு செய்வதுடன், இதை நிறுவனங்களுக்கு விற்பதாகவும் மேலும் இவற்றை அரசு கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பல தன்னார்வக்குழுக்கள் கூகில் மீது குற்றம் சாட்டியுள்ளது.

தை ஒப்புக்கொள்ளும் முகமாகவே கூகிளின் தலைவரின் கூற்றும் உள்ளது.

http://www.youtube.com/watch?v=ncerhCLi2o0

ஆகவே கூகிளை பயன்படுத்தும் போது இதை அறிந்து பயன்படுத்தவும், உங்களுடைய அந்தரங்க தகவல்கள், வேலை மற்றும் அலுவலக தகவல்கள், நிறுவனத்தின் முக்கிய மற்றும் தனித்தகவல்கள் போன்றவற்றை கூகிளில் பயன்படுத்தும் போது, எந்த வடிவத்தில் இருந்தாலும், சாட்டிங் ஆகவோ, புகைப்படமாகவோ, ஒலியாகவோ, ஒளியாகவோ, இ-மெயில் ஆகவோ, இந்த தகவல்கள் விற்கப்படலாம் அல்லது பகிர்ந்து கொல்லப்படலாம், உங்களது போட்டி நிறுவனங்களுக்குகூட இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

செய்தி: எஸ் ஜாஃபர் அலி Phd (USA).

Sunday, September 5, 2010

பாலைவனப் பயணம்!

தூரமாக நீ இருந்தாலும்
சாரலாக நம் நினைவுகள்;
திகட்டாத நாளாய் நம்
திருமண நாளாம்!

தடவிய நறுமணம் மறைவதற்குள்
தாகத்துடன் பாலைவனப் பயணம்!
அவசர விடுப்பில்
அவசரமாய் திருமணம்!

முடித்து நாடு திரும்பினேன்
மூன்றே நாளில்;
தோய்ந்த முகமும்
துவண்டத் தோள்களும்
தள்ளாடும் நடையுடன் இங்கே நான்!

பலிக்கடாவாய் ஆக்கினேனோ உன்னை
பனியாய் கண்களில் முட்டும் உன் கண்ணீர்
பரிதவிக்க வைத்த பாலைவனப் என் பயணம்!

அலைப்பேசியில் அழைத்தாலும்
அதிகமாய் உன் அழுகைச் சப்தம் மட்டும்தான்!
கலையாத மருதாணியும் என்
கண்களில் நிற்க!

கேளியும் கிண்டலுமாய் இங்கே
புதுப் மாப்பிள்ளை என நண்பர்கள் கொறிக்க;
அழுதுக் கொண்டே சிரித்துக் கொண்டேன்
அயல் நாட்டின் அவலத்தை எண்ணி!!

Source : http://itzyasa.blogspot.com

Tuesday, August 24, 2010

ஓ இளைஞனே !

விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை..

விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்..

கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்..

சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்..

எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்..

மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்..

சுறுசுறுப்பாக மாறிப்பார்..

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி

Friday, August 20, 2010

வளைகுடா..

வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா..

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்..

Source : http://itzyasa.blogspot.com

பாலஸ்தீன்..

கண்ணிருண்டு அதற்க்கொரு
கதையுண்டு;
விழிப்பிதிங்கி நிற்க்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..

எழுதியவர் : யாசர் அரஃபாத்

அழுகையோடு..

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..

ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...

மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..

எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..

மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;

எழுதியவர் :
யாசர் அரஃபாத்

Thursday, August 19, 2010

ஆறுதலாய் உள்ளது

கனமான நெஞ்சத்தால்
குளமாயின கண்கள்;
நீங்காத உன்
நினைவுகளால்
தூங்காத என் விழிகள்!!


ஏங்காத நாளில்லை
எப்போது என் விடுமுறை
என்று!


வறண்ட பாலை நாட்டில்
புறண்டு புறண்டுப் படுத்தாலும்
பொழுது என்னவோ நமக்கு மட்டும்
இன்னும் விடியாமல்!!


ஒரிரு நாள்
மனக்கசப்பால்
நாவு தடித்தாலும்;
தழும்பாய் உன் நினைவுகளுக்கு மட்டும்
நீங்கா இடம்!!


இனியொருமுறை
கலங்காதே
கைப்பேசியில்;
சமாதானம் செய்யவே
சம்பளம் போதாது!!


முத்தம் கொடுக்க
முனைந்தாலும்
முதலில்
முட்டுவதென்னவோ
கைப்பேசிதான்!!


அலட்டிக்கொள்ளும் மனதிற்கும்
ஆறுதலாய்தான் உள்ளது;
“வாய்ப்” நமக்கெல்லாம் நல்ல
வாய்ப்பாக ஆனதை எண்ணி!!

Tuesday, August 17, 2010

அன்பும்.. இடியும்..

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…!

Thursday, August 5, 2010

ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி



சென்னை:
பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன்.

"விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம்..." சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.


இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.

ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'Attention Drawing Behavior' என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?

நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

டாக்டர் டி. நாராயண ரெட்டி (ஆனந்த விகடனில்).

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்


திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.

செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.

ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.

அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

ன்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

ந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

Tuesday, July 27, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல்..

றவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே
ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.


ரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?


ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.


வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.


கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"


அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"


வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.


மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"


திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.


இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?


தையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.


புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.


வறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.


னவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

Wednesday, July 14, 2010

என்றாவது ஒருநாள்..

என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பலகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!

வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இழிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!

தயக்கத்திலே..

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!

பாலையில் நீ..

மணம் வீசும்
மண வாழ்வில்
மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே
தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்
பாலைக்கு!

வீங்கிய இமைகளும்
தூங்க மறுக்க;
சாயம் போகா மருதாணியும்
புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!
மருந்தாய் உன் குரல் மட்டும்;
விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்
சிணுங்கிய கண்களோடும்
இல்லாத வார்த்தைகளால்
சொல்லாமல் நான் தவிக்க;
வருட வேண்டிய நீயோ
வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;
யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட
பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்
புரிந்துக்கொள்ளும் தூரத்தில்
நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்
என்று யாரோ சொல்ல;
கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!

இதோ இதோ என்று
இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;
என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி
பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்
காய்ந்துப் போன மனதுடன்
தீய்ந்துப் போன வயதுடன்
இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக
என் பெற்றோருக்கு!!

தீராத எங்கள் தாகம்..

பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;

கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!

காலம் கடந்து..

உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!

பயந்து பலியாவதைவிட..

வீதியில் நாங்கள்
பாதியில் பயணம்;
அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;
ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;
பாதம் மட்டும்தான்!!

வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று
வீதியில் உலா வர;
சிதறி ஒடிய கூட்டதிற்குள்
குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!

அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;
கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!

கரம் சோர்ந்தாலும்
கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;
என் முட்டி இரண்டும்
பூமியை முத்தமிடுவதற்கு முன்
பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!

கனலாய் கண்ணீர்த் துளிகள்
வீழ்வதற்காக அல்ல;
என் தலைமுறை வாழ்வதற்காக!!

கற்களோடு
களத்தில் நாங்கள்;
வருத்தப்பட வேண்டிய உலகமோ
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;
அட்டைப்படம் ஜொலித்தது!!

வீழ்ந்த மழலைகளைச் சுற்றி
சூழ்ந்த கூட்டம்;
ஒளிரும் புகைப்படக் கருவியால்
மிளிரும் பக்கங்கள்;

கவிதைக்குக் கருவாய்
படத்திற்குக் கதையாய்
கட்டுரைக்கு உரையாய்
வரலாற்றுக்கு வலியாய்
செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்
பாலஸ்தீனியராக நாங்கள்;

பறித்துக் கொண்ட என் உரிமைகள
பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்
தீவிரவாதி என்று!!

இனி
வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்
பயந்து பலியாவதைவிட
பாய்ந்து புலியாவதே மேல்!!

எப்போது விடுமுறை?

ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!


அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!

இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!

அயல்தேசத்து ஏழை..!

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான் துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !

மரஉச்சியில் நின்று ...
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்....நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்! கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு! பழையசடங்குகள் மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது எங்களின் நீண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின் நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான் ஆறுதல் தருகிறது!
ஆம்... இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;

" இறுதிநாள் " நம்பிக்கையில்தான் இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு... முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும்- ரியாலும் தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின் வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின் மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்... பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு..!

இணைய நட்பு..!

இணைய நட்பு
என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகிதனே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?


திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்...


காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்...


இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?

கேட்காதே...!

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை
ரகசியமாய் பேசிச்செல்வான்
ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை,
பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை
அவன் வரிகளை..!

வணிகம்..!

உன் மனதை
எனக்கு கொடுத்து விட்டு..
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்!
காதல் ஒரு வணிகமா! இல்லை சுயநலமா!
எப்படியிருந்தாலும்.......
இந்த இரண்டிலும் நீயே வென்றாக வேண்டும்.

மனம்தான் இல்லை!

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே
எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்
ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்
உண்மையிங்கு அதுவல்ல..!

நாம் யார்?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!

வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்

நிஜத்தை
தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!

கடிதத்தை
பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்

மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!

நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!

ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்
துறந்தவர்கள்!

வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து

கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!

தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!

அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!

உழைப்பு என்ற
உள்ளார்ந்த
அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு

முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!

கொளுத்தும்
வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும்
தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த
குழந்தைக்கும்
உற்ற
குடும்பத்திற்கும்

உண்மை
நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள் ஆனாலும்.....

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

ஆனாலும்.....


மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு
நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?